ஈரோடு: ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுகி வடமாநில சிறுவன் உயிரிழப்பு
சென்னிமலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் கயிறு சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு,
பீகார் மாநிலம், ஜாஜா பகுதியைச் சேர்ந்தவர் ஜனதாகுமார் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நிக்கி தேவி என்பவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் கடந்த 5 வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் பியூஷ்குமார் மற்றும் 10 வயதில் ராஜாகுமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சிறுவர்கள் பியூஷ்குமாரும் ராஜாகுமாரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நிலையில் சிறுவர்கள் இருவரும் மாலை நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் பிளாஸ்ட்க் கயிற்றில் தூரி கட்டி (ஊஞ்சல்) விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ராஜா குமார் தனது கழுத்தில் பிளாஸ்டிக் கயிற்றைப் போட்டுக் குதித்த போது எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் கயிறு கழுத்தை இறுக்கியதால் மயங்கி கீழே விழுந்துள்ளான்.
பின்னர் உடனடியாக அருகிலிருந்தவர்கள் ராஜகுமாரை பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜாகுமார் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story