புதுவையில் 6 மாதங்களாக லட்சக்கணக்கில் புழக்கம் கள்ள நோட்டுகளை சப்ளை செய்த கும்பல் சிக்கியது தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


புதுவையில் 6 மாதங்களாக லட்சக்கணக்கில் புழக்கம் கள்ள நோட்டுகளை சப்ளை செய்த கும்பல் சிக்கியது தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 9 March 2022 7:12 PM IST (Updated: 9 March 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ள நோட்டுகளை சப்ளை செய்த கும்பல் சிக்கியது தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த 6 மாதங்களாக புழக்கத்தில் விட்ட நிலையில் கள்ள நோட்டுகளை சப்ளை செய்த சென்னை கும்பல் தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டது.

மது பாரில் குடித்தவர்கள்

புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மது பாருக்கு சென்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாரம் தென்றல் நகரை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 29), பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த ஜெயபால் (21) ஆகியோர் மது குடித்தனர். 
இதன்பின் மது குடித்ததற்கு பணமாக பார் ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை அவர்கள் கொடுத்துள்ளனர். அந்த ரூபாய் நோட்டுகளை பார்த்த கடை ஊழியர் சந்தேகமடைந்து பரிசோதித்த போது அது கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மது பார் ஊழியர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து வைத்துக் கொண்டு உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். 

6 மாதங்களாக புழக்கம்

விசாரணையில் அவர்கள் அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மகன் சரண் (27) என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கியது தெரியவந்தது. 
அவரை கைது செய்து விசாரித்த போது புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன் கமல் (31) என்பவர் ஒரிஜினல் பணத்துக்கு 5  மடங்காக சென்னையில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி கடந்த 6 மாதங்களாக புதுவையில் புழக்கத்தில் விட்டது அம்பலமானது.
இதனை தொடர்ந்து போலீசார் மோகன்கமல் உள்பட 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மோகன் கமல் பா.ஜ.க. பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது தெரியவந்தது.

கடலூர், விழுப்புரம்

புதுவையில் மட்டுமல்லாது அருகில் உள்ள தமிழக மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் பகுதியில் லட்சக்கணக்கில் கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கள்ள நோட்டுகள் சிக்கியது குறித்து தகவல் அறிந்து சென்னையில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் புதுவை வந்து விசாரணை நடத்தினர். இதேபோல் தேசிய புலனாய்வு பிரிவினரும் சென்னை மற்றும் புதுச்சேரியில் இதுகுறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் உள்ள 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிடிப்பட்ட சென்னை கும்பல்

கைதான மோகன் கமலுக்கு சென்னையில் இருந்து முக்கிய புள்ளி ஒருவர் கள்ள நோட்டுகளை சப்ளை செய்து இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தநிலையில் கள்ளநோட்டு கும்பலை பிடிக்க போலீஸ் டி.ஜி.பி ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தரவின் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கள்ள நோட்டுகளை பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.
இவர்களில் ஒருபிரிவினர் சென்னையிலும், மற்றொரு பிரிவினர் கரூரிலும் முகாமிட்டு தமிழக போலீசாருடன் இணைந்து கள்ள நோட்டு கும்பலை கூண்டோடு வளைக்க அதிரடி வியூகம் வகுத்துள்ளனர்.
சென்னையில் கள்ள நோட்டு கும்பலை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளதாகவும் அவர்களது பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் ரகசிய நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

500 ரூபாய் நோட்டுகளை கண்டால் 
வியாபாரிகள் ‘அலர்ஜி’

புதுச்சேரியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 6 பேர் கைதான நிலையில் 500 ரூபாய் நோட்டுகளை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மிகுந்த கவனத்துடன் வாங்குகிறார்கள்.
இதேபோல் அதிக பண பரிவர்த்தனை நடக்கும் மதுக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை பரிசோதித்து வாங்குமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ரூபாய் நோட்டுகளில் சந்தேகம் இருந்தால் அதனை வாங்க மறுத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. மார்க்கெட்டுகள், கடைகளில் கூட வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை பார்த்து அலர்ஜிக்குள்ளாகிறார்கள். இந்த இடங்களில் நன்கு பழகிய முகம் தெரிந்தவர்களிடம் மட்டுமே 500 ரூபாய் நோட்டுகளை வாங்கியதை காண முடிந்தது.


Next Story