சினிமா நடிகை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் ...! பணம் நகை கொள்ளை


சினிமா நடிகை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் ...! பணம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 10 March 2022 6:49 PM IST (Updated: 10 March 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கத்தி முனையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துணை நடிகை வீட்டில் இருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனடியாக துணை நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர்.

பின்னர் இருவரும் துணை நடிகை வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதன் பிறகு அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது அவர்கள் துணை நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அதில், அடையாளம் தெரியாத இருவர் என்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், பணம், நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

 உதவி கமி‌ஷனர் கலியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குருஸ், சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இதில் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் 2 பேர் செல்வது தெரியவந்தது. வீட்டு அருகில் கேமராக்கள் இல்லாத நிலையில் சற்று தூரத்தில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருவரின் உருவமும் பதிவாகி இருந்தது. ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து துணை நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பமாக துணை நடிகை கத்தி முனையில் மிரட்டி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதன்படி நேற்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டி கற்பழிப்பிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான செல்வக்குமார் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆகும். கைதான இன்னொரு வாலிபரான கண்ணதாசன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இருவர் மீதும் 376 ஐ.பி.சி. மற்றும் 397 ஐ.பி.சி. ஆகிய 2 சட்டப்பிரிவுகள் போடப்பட்டு உள்ளன. இதில் 376 சட்டப்பிரிவு கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்காக போடப்பட்டு உள்ளது. 397 என்பதும் வழிப்பறிக்காக போடப்படும் வழக்காகும்.

இருவரும் துணை நடிகையிடம் இருந்து பறித்துச் சென்ற நகை, பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடியிருப்புகள் மிகுந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் வீடு புகுந்து துணை நடிகை கத்தி முனையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story