ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக மேலும் ஒருவர் கைது படகு மூலம் கடல் வழியாக கூட்டாளி தப்பி ஓட்டம்
புதுவையில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக சென்னை வாலிபர் கைதானார். படகு மூலம் கடல் வழியாக தப்பிய கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்
புதுவையில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக சென்னை வாலிபர் கைதானார். படகு மூலம் கடல் வழியாக தப்பிய கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுக்கடையில் கள்ள நோட்டு
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மதுபாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்தவர்களை மதுக்கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் உருளையன்பேட்டை போலீசார் விசாரித்ததில் சாரம் தென்றல் நகரை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 29), பிள்ளைத்தோட்டம் ஜெயபால் (21) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்ததில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தொடர் சங்கிலியாக அரும்பார்த்தபுரம் சரண், புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன்கமல் (31) ஆகியோர் சிக்கினர்.
சென்னை வாலிபர் சிக்கினார்
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மோகன்கமலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த கும்பலிடம் இருந்து ஒரு மடங்கு ஒரிஜினல் பணத்துக்கு 5 மடங்கு கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்து புதுவையில் புழக்கத்தில் விட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய புலனாய்வு பிரிவினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே தனிப்படை அமைத்து போலீசார் சென்னை, கரூரில் முகாமிட்டு கள்ள நோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க வலைவிரித்தனர். இதில் சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 35) என்பவர் சிக்கினார்.
கூட்டாளி ஓட்டம்
அவரிடம் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த கூட்டாளியான ரகு என்பவருடன் சேர்ந்து மோகன்கமலுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதீப்குமார் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியான ரகுவை போலீசார் போலீசார் தேடிச்சென்ற போது முன்கூட்டியே சென்னையில் கடல் வழியாக படகு மூலம் அவர் தப்பி சென்று விட்டது அம்பலமானது.
இந்தநிலையில் பிரதீப்குமாரை கைது செய்த போலீசார் அவரை புதுவைக்கு கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் செலவு
விசாரணையில், அவரிடம் இருந்து மோகன்கமல் இதுவரை ரூ.5 லட்சம் கள்ளநோட்டுகளை வாங்கியது தெரியவந்தது. அந்த ரூபாய் நோட்டுகளை புதுச்சேரியில் உள்ள சண்டே மார்க்கெட், பூ மார்க்கெட் பகுதியில் தங்கள் கூட்டாளிகள் மூலம் மோகன்கமல் புழக்கத்தில் விட்டுள்ளார்.
புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு பயன்படுத்திய திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பிரதீப்குமாரிடம் மோகன் கமலுக்கு மட்டும் தான் கள்ள நோட்டுகள் வழங்கப்பட்டதா? புதுவையை சேர்ந்த வேறு நபர்களுக்கும் வினியோகிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.
காவலில் விசாரிக்க முடிவு
இதற்கிடையே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகன் கமல் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது புதுவையில் யார், யார்? மூலம் எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது என்பது பற்றிய முழுமையான தகவல் தெரிய வரும்.
தொடர்ந்து பிரதீப்குமாரின் கூட்டாளியான ரகுவை கடலோர கிராமங்களில் போலீசார் தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story