தமிழகத்திலுள்ள கோவில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியீடு


தமிழகத்திலுள்ள கோவில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியீடு
x
தினத்தந்தி 11 March 2022 12:34 AM IST (Updated: 11 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்டங்களில் உள்ள கோவில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் தல வரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியாக அந்தந்த பகுதியின் சிறப்பு வாய்ந்த மற்றும் பாடல் பெற்ற தலங்களை தொகுத்து ஆன்மிகத் தலங்களுக்கு பயணிப்பவர்களுக்கு வசதியாக “திருக்கோவில்களின் வழிகாட்டி” எனும் பெயரில் மாவட்ட கையேடுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாவட்ட கையேட்டில் கோவிலின் சுருக்க வரலாறு, அமைவிட வரைபடம், தொடர்பு முகவரி, கோவிலின் சிறப்பு மற்றும் தரிசிக்க வேண்டிய படங்களுடன் கூடிய தகவல்களுடன், அருகில் உள்ள சிறப்பு தலங்களின் குறிப்புகளும் வெளியிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரே அளவில் பலவண்ண தரத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் வெளியீடு

இதன் மென்பிரதியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தலத்தின் வரலாற்று சிறப்பை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் விரைவு குறியீடுகளும் வெளியிடப்படும். இதனால் இந்தியா மற்றும் மற்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்து பயனடையும் வகையில் இத்தகைய கையேடுகள் தயார் செய்ய வேண்டும். மாவட்ட கையேடுகளை விரைவில் வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதன் மென்பிரதியை இணை கமிஷனர்கள் சேகரித்து கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

Next Story