“உயர் கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும்” - கோவையில் கவர்னர் பேச்சு
உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடு பட வேண்டும் என்று கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய துணைவேந்தர்கள் மாநாடு இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இங்கே வந்துள்ள துணை வேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் நன்மை இருக்க வேண்டும். எனவே நாம் எல்லோரும் உயர் கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும்.
இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதை பார்க்க வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலம் தான்.
அரசுகள் 5 ஆண்டுகள் தான். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள். அதுதான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது. அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது.
அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சினைகள், சமூக பதட்டங்கள் இருக்கவே செய்கின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை.
இதனால் மாநிலங்களுக்கு இடையே, மண்டலம் வாரியாக சமநிலை இருப்பதில்லை. 2014-ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் நிலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கவர்னர்,
18 மொழி செப்புடையாள் என பாரதியின் பாடலை தமிழில் தெரிவித்த அவர், இதைபோல ஓரே சிந்தனையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story