புதுச்சேரியில் இரும்பு டன்னுக்கு ரூ 20 ஆயிரம் உயர்வு சிமெண்டு எலக்ட்ரிக்கல் பொருட்கள் விலையும் அதிகரிப்பு


புதுச்சேரியில்  இரும்பு  டன்னுக்கு  ரூ 20 ஆயிரம் உயர்வு சிமெண்டு எலக்ட்ரிக்கல் பொருட்கள் விலையும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 March 2022 12:28 AM IST (Updated: 12 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெய் வகைகளை தொடர்ந்து புதுச்சேரியில் இரும்பு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. சிமெண்டு, எலக்ட்ரிகல் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி
எண்ணெய் வகைகளை தொடர்ந்து புதுச்சேரியில் இரும்பு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. சிமெண்டு, எலக்ட்ரிகல் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர்

ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் தாக்கம் பல்வேறு விதங்களில் பொதுமக்களை பாதித்து வருகிறது. குறிப்பாக தங்கத்தின் விலை கடந்த 2 வாரத்தில் நிலையற்றதாக இருந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகரித்துள்ளது.

இரும்பு, சிமெண்டு விலை உயர்வு

இந்தநிலையில் பங்குச்சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வப்போது இரும்பு விலை (முதல் தரம்) ஏற்றத்தாழ்வை சந்திப்பது வழக்கம். ஆனால் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து இரும்பு விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது. 
அதாவது, புதுச்சேரியில் கடந்த 15 நாட்களில் மட்டும் (முதல், 2-ம் தரம்) ஒரு டன் ரூ.20 ஆயிரம் வரை இரும்பு விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் இரும்பு (முதல் தரம்) ரூ.75 ஆயிரமாக இருந்தது. ஆனால் டன்னுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ.95 ஆயிரமாக விற்கப்படுகிறது. 2-ம் தரம் ரூ.62 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்ந்து ரூ.82 ஆயிரமாக உள்ளது. 
இந்தநிலையில் முதல் தரம் கம்பிகள் ஓரிரு வாரங்களில் மேலும் ரூ.15 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் சிமெண்டு ஒரு மூட்டை (50 கிலோ) ரூ.350-ல் இருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி கட்டுமான தளவாடங்களான எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.

வியாபாரிகள் அதிர்ச்சி

இதுகுறித்து இரும்பு வியாபாரிகள் மதி, மோகன், யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:- 
இரும்பு விலையில் தேவைக்கேற்ப ஏற்றத்தாழ்வு இருக்கும். கோடை காலங்களில் அதிகரித்தும் மழைக்காலங்களில் குறைந்தும் விற்கும். ஆனால் இந்தியாவில் இரும்பு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தற்ேபாது ரஷியா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக மூலப்பொருட்கள் இறக்குமதி குறைவு மற்றும் பங்கு சந்தை சரிவால் இரும்பு விலை கடந்த 15 நாட்களில் மட்டும் டன்னுக்கு முதல், 2-வது தரம் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இது வியாபாரிகளை  மட்டுமின்றி காண்டிராக்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வியாபாரிகள், காண்டிராக்டர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகள் முழுவதும் பாதிக்கப்படும் என அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இரும்பு கம்பி உள்பட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story