23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை


23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 12 March 2022 4:22 AM IST (Updated: 12 March 2022 4:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று 23 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் உயிரிழப்பு இல்லை.

சென்னை,

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 42 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் தலா 56 பேர் உள்பட மொத்தம் 112 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், கோவையில் 13 பேரும், செங்கல்பட்டில் 12 பேரும், நீலகிரியில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 247 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 108 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 46 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் 23 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 23 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 354 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 1,676 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story