சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு


சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 12 March 2022 4:26 AM IST (Updated: 12 March 2022 4:26 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புகளுக்கு இரண்டாம் கட்ட பருவத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி தேர்வு தொடங்குகிறது.

சென்னை,

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பருவத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் முதற்கட்ட பருவத்தேர்வு நடந்தது. அதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 17-ந் தேதியும் தொடங்கி நடந்து முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட பருவத்தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அதற்கான முழு கால அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பர்த்வாஜ் வெளியிட்டு இருக்கிறார்.

அந்தவகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந் தேதி வரை ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 26-ந் தேதி தொடங்கி மே மாதம் 24-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சில தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், சில தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடக்க இருக்கிறது.

முன்கூட்டியே நடத்த முடியாது

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பர்த்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கற்றல் இழப்புக்கு வழிவகுத்த தொற்றுநோய் காரணமாக 2 பருவத்தேர்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து பாடங்களும் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்வுகள் திட்டமிடப்பட்டு இருந்தது.

இடைப்பட்ட காலம் குறைவாக இருக்கும் என கருதப்படும் பகுதிகளில், மாணவர்கள் இந்த தேர்வுகளை எதிர்கொள்வதற்காகவும், போதுமான நேரத்தை வழங்குவதற்காகவும் அத்தகைய தேர்வுகள் பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தேர்வு அட்டவணை ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு உள்ளிட்ட பிற போட்டித்தேர்வுகளை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளன. ஒரு மாணவரின் 2 பாடத்தேர்வுகள் ஒரே நாளில் வந்துவிடாதபடியும் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்வு நடக்கும் காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால், தேர்வை முன்கூட்டியே நடத்த முடியாது. தேர்வு காலை 10.30 மணிக்கு தான் தொடங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story