சென்னையில் இருந்து சேலம் வழியாக சென்ற ரெயிலில் ரூ.44 லட்சம் நகைகள்,பணம் பறிமுதல்-வாலிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை


சென்னையில் இருந்து சேலம் வழியாக சென்ற ரெயிலில் ரூ.44 லட்சம் நகைகள்,பணம் பறிமுதல்-வாலிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2022 3:21 AM IST (Updated: 13 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சேலம் வழியாக சென்ற ரெயிலில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்:
சென்னையில் இருந்து சேலம் வழியாக சென்ற ரெயிலில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் சோதனை
சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் முறைகேடாக தங்கம், வெள்ளி, பணம் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22637) சேலம் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
110 பவுன் நகை பறிமுதல்
எஸ்-8 பெட்டியில் சோதனை செய்த போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கோவை மாவட்டம் காளம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் விக்னேஸ்வர மூர்த்தி (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான பதில் தெரிவித்தார்.
இதனால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதற்குள் 6 பாலித்தின் பைகளில் 110 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 430 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.44 லட்சம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் தங்கம் மற்றும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் விக்னேஸ்வர மூர்த்தியிடம் இல்லை.
அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து பணம் மற்றும் நகையை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து விக்னேஸ்வர மூர்த்தியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணமும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணையில், விக்னேஸ்வர மூர்த்தி கோவையில் நகை உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக நகையை வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதிகளில் நகையை விற்ற பணமும், மீதமுள்ள நகையையும் ரெயிலில் கோவைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story