கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள்: டாக்டர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் மறந்து கொண்டிருக்கிறார்கள் என டாக்டர் ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று 50 ஆயிரம் மையங்களில் நடந்தது. அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நிருபர்களிடம் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 91.77 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 73.74 சதவீதம் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரை 6.81 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்துவிட்டது, தடுப்பூசி தேவையில்லை என பொதுமக்கள் கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது. இன்னும் 1.05 கோடி பேர் கோவிஷீல்டும், 27.46 லட்சம் பேர் கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 1.33 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர்.
மறந்து கொண்டிருக்கிறார்கள்
பொதுமக்கள், கொரோனா தடுப்பு பழக்க வழக்கங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை மறந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க மீதமுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியதால் தான், 3-வது அலையில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை ஆயிரம் பேர் கொரோனாவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார். தமிழகத்தில் 2-வது அலையில் 3.13 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தனர். அந்த நிலைமை தற்போது மாறி, 1,461 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதிலும் ஆஸ்பத்திரியில் 242 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
4 கட்டுப்பாட்டு பகுதிகள்
மேலும், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்துள்ளது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள 1.28 லட்சம் குடியிருப்புகளில், 2 இடங்களில் மட்டுமே 3 பேருக்கு மேல் தொற்று உள்ள பகுதிகளும், நகர்புறங்களில் உள்ள 1.26 லட்சம் தெருக்களில் 2 தெருக்களில் மட்டும் 3 பேருக்கு மேல் தொற்று உள்ள பகுதிகள் என 4 இடங்கள் மட்டுமே உள்ளன.
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை படிப்படியாக குறைந்து, நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் தாய்-சேய் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்துக்கு, 60 என்ற நிலை மாறி தற்போது 58 ஆக குறைந்துள்ளது.
சிகிச்சையில் யாரும் இல்லை
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தற்போது சிகிச்சையில் இல்லை. சந்தேக அடிப்படையில் மட்டுமே 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், கீழ்ப்பாக்கத்திலும் சிகிச்சையில் யாரும் இல்லை. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 2 பேரும், ஓமந்தூராரில் ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று குறித்து ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story