நிபந்தனை ஜாமீன்: திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்


நிபந்தனை ஜாமீன்: திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 14 March 2022 11:37 AM IST (Updated: 14 March 2022 11:37 AM IST)
t-max-icont-min-icon

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டார்.

திருச்சி, 

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதால் தி.மு.க. பிரமுகரை தாக்கியாக பதிவான வழக்கில் அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் (சட்டம்- ஒழுங்கு) காவல் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டார். நிபந்தனை ஜாமீன்படி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருக்க வேண்டும். திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், செவ்வாய், புதன் என வாரத்தில் 3 நாட்கள் வீதம் 2 வாரங்களுக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவார்.

முன்னதாக போலீஸ் நிலைய வாசலிலேயே தி.மு.க.அரசுக்கு எதிராகவும், போலீஸ் அராஜகம் ஒழிக என்றும் கோஷம் எழுப்பப்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story