மாணவனை தாக்கிய ஆசிரியர்; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்..!
வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கடலூர்,
விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 14). இவன் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று அந்த மாணவனை, ஆங்கில ஆசிரியர் விஜயா வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை எனக் கூறி தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மாணவன் நடக்க முடியாமல் சிரமப்பட்டான்.
இது குறித்து அறிந்த ரகுபதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து ஆசிரியர் தாக்கியதில் காயம் அடைந்த ரகுபதி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story