விபத்தில் சிக்கியவர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவலம்


விபத்தில் சிக்கியவர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவலம்
x
தினத்தந்தி 14 March 2022 8:09 PM IST (Updated: 14 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

பாகூரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் விபத்தில் சிக்கியவர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பாகூரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் விபத்தில் சிக்கியவர்களை ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வசதி
பாகூரில் அரசு ஆரம்ப நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, பரிக்கல்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் 108  ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பாகூர், கிருமாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்கு அனுப்ப ஏதுவாக இருந்து வந்தது.
இந்தநிலையில் அந்த ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகூர் ஆம்புலன்ஸ் பழுதானது. இதுவரை பழுதுநீக்கம் செய்யாததால் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக  புதுச்சேரிக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இல்லையெனில் கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம் மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்சை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. 
ஆட்டோவில் ஏற்றி செல்லும் அவலம்
இந்த நிலையில் இன்று காலையில் கடலூர்-புதுச்சேரி சாலை காட்டுக்குப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்த தொழிலாளி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 3 பேர் காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் பாகூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் அரியாங்குப்பத்தில் இருந்து வாகனம் வருவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story