போலீஸ் நிலையம் முற்றுகை பதற்றம்


போலீஸ் நிலையம் முற்றுகை பதற்றம்
x
தினத்தந்தி 14 March 2022 8:14 PM IST (Updated: 14 March 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

கரையாம்புத்தூரில் இரு தரப்பினர் மோதல் எதிரொலியாக ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரையாம்புத்தூரில் இரு தரப்பினர் மோதல் எதிரொலியாக ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக சென்றதால் தகராறு
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் காலனி பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் குணால் (வயது 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், தினகரன், உதயா, எத்திராஜ், பூபதி ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், குணாலிடம் ஏன் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்கிறாய்? என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கம்பு, கல்லாலும் அவரை தாக்கியதாக தெரிகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குணாலின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் பாகூர், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் குணாலின் ஆதரவாளர்கள்  சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். குணாலை தாக்கிய 5 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போலீஸ் குவிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக கரையாம்புத்தூர் போலீசார் ரவிச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Next Story