தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18-ந்தேதி நடக்கிறது


தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 14 March 2022 11:54 PM GMT (Updated: 14 March 2022 11:54 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 18-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர், முழுமையான பட்ஜெட் வருகிற 18-ந்தேதியன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

இது, காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி, பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்தநிலையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மாலையில் சென்னையில் தி.மு.க. எம்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய ஆலோசனைகள்...

இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார், யாரெல்லாம் பங்கேற்கவேண்டும்?, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவகையில் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்?, அவை மாண்புகளை பின்பற்றுவது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story