அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை ? - மதுரை ஐகோர்ட்டு
அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் ராதிகா மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,
அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story