புதுச்சேரி கடற்கரையில் உருவாகும் கன்வென்சன் சென்டர் தனியாரிடம் ஒப்படைப்பு ரங்கசாமி தகவல்
புதுச்சேரி கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கன்வென்சன் சென்டரை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கன்வென்சன் சென்டரை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
கன்வென்சன் சென்டர்
புதுவை கடற்கரை சாலையில் பழைய சாராய ஆலை கட்டிடம் வெகுகாலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. அந்த ஆலையை இடித்துவிட்டு அங்கு கன்வென்சன் சென்டர் கட்ட முடிவு செய்யப்பட்டது.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் தற்போது தரைத்தளத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டர், மேல்தளத்தில் 3 ஆயிரம் சதுரமீட்டரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 14 தங்கும் அறைகள், கருத்தரங்க கூடம், திறந்தவெளி கலையரங்கம் ஆகியன இடம் பெற்றுள்ளன. விசாலமான கார் பார்க்கிங் வசதியும் அங்கு உள்ளது.
ரங்கசாமி ஆய்வு
இந்த கட்டிட பணிகள் சுமார் ரூ.13 கோடி செலவில் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி திடீரென அங்கு ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலாளர் அருண், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
தனியாரிடம் ஒப்படைக்க...
ஆய்வை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய சாராய ஆலையில் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. அவை ஓரிரு மாதங்களில் நிறைவடைந்துவிடும். இதனை அரசு நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் உள்ளது. அதற்கு டெண்டர் வைக்க உள்ளோம். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அறைகள் அனைத்தும் கடல் பகுதியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை உருவாக்கி தருவார்கள். இந்த இடம் பெருமளவில் சுற்றுலா பயணிகளை கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி மாணவர்கள்
உக்ரைனில் சிக்கியிருந்த புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டார்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, புதுவை மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story