போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு


போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 15 March 2022 8:56 PM IST (Updated: 15 March 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணிபுரிந்தவர் ஏ.அபிமன்யு. இவர் 18.12.2021-ல் திருச்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி அபிமன்யு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறேன். தொழிற்சங்கத்தினரின் தூண்டுதல் பேரில் என்னை இடமாறுதல் செய்துள்ளனர். இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வுக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் மதுரையிலிருந்து திருச்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மதுரையிலிருந்து வெகுதொலைவில் இல்லை. ஓய்வு பெறும் நேரத்தில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள் நிறைய உள்ளன. எப்படியிருந்தாலும் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும்.

தொழிற்சங்கத்தினர் தூண்டுதலால் தன்னை இடமாறுதல் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தினர் மீது மனுதாரர் சட்டப்படி புகார் அளிக்கலாம். போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுப்பதில் அதிகாரிகள்தான் சிறந்தவர்கள். நீதிமன்றங்கள் தேவையில்லாமல் தலையிடுவது நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

மனுதாரருடன் மேலும் இரு உதவி மேலாளர்களும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மனுதாரர் இடமாறுதலில் தலையிட வேண்டியதில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story