சீர்காழி: 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு - அர்ச்சகர் கைது


சீர்காழி: 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு - அர்ச்சகர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 6:45 PM IST (Updated: 16 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 உலோக சாமி சிலைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான  2 உலோக சாமி சிலைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோவில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சாமி சிலைகளையும்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி இன்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் அந்த உலோகச் சிலைகளை மறைத்து வைத்திருந்த கோவில் குருக்களை கைது செய்த போலீசார் அவரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

4 உலோக சிலைகள் மாயம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மன்னன்கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சாமி சிலைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. 

அவ்வாறு மாயமான உலோக சாமி சிலைகளை கண்டுபிடித்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி தினகரன் உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வன், பாலச்சந்திரன், சின்னதுரை உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படையினர் மாயமான சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

2 சிலைகள் மீட்பு

இந்த விசாரணையில் ஒரு பகுதியாக சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கோவில் குருக்கள் சூரியமூர்த்தி (வயது 75) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நெம்மேலி கிராமத்தில் உள்ள விசாலாட்சி உடனாகிய விசுவநாத சாமி கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன் கருவறை மண்டபத்தில், சாமி சிலைக்கு பின்புறம் பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி ஆகிய 2 உலோக சாமி சிலைகளை சூரியமூர்த்தி மறைத்து வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து சூரிய மூர்த்தியை கைது செய்த போலீசார் கருவறை மண்டபத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலோக சாமி சிலைகளையும் கைப்பற்றினர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சனீஸ்வரன் வெள்ளிக்கவசம், இரண்டு வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் ஒரு வெள்ளிக் குடம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 2 கோடி என கூறப்படுகிறது.

அர்ச்சகர் கைது

கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சூரியமூர்த்தியையும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாண்டி மகாராஜா குருக்கள் சூரிய மூர்த்தியை வருகிற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story