அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி இல்லாதது தமிழர்களுக்கு பெரிய தலைக்குனிவு - டாக்டர் ராமதாஸ்


அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி இல்லாதது தமிழர்களுக்கு பெரிய தலைக்குனிவு - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 16 March 2022 7:25 PM IST (Updated: 16 March 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 54 அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசு பள்ளிகள் உள்ளது தமிழர்களுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாட்டில் 54 அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசு பள்ளிகள் உள்ளது என பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிட்டபட்டது. இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசு பள்ளிகள் உள்ளதா? என்று பள்ளிக்கல்வித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் 54 அரசு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”54 அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லை என்பது தவறு. தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அனைத்து மாணவர்களும் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பது தான் சரி”, என்று விசித்திரமான விளக்கம் கூறியிருப்பது அரசின் தவறை முற்றிலுமாக மறைத்து விட்டு, மாணவர்கள் மீது பழி போடும் செயலாகும்.

தாய்மொழி வழி கல்வி எதற்கும் குறைந்ததல்ல. சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்தி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story