உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதி


உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதி
x
தினத்தந்தி 16 March 2022 11:13 PM IST (Updated: 16 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் தாசில்தார் அலுவலகம் முன்பு தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

மரக்காணம் தாசில்தார் அலுவலகம் முன்பு தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி  வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் சின்ன காலனியில் வசிப்பவர் ஆறுமுகம், இவரது மகன் பிரதாப் (வயது30). இன்று மதியம் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் மரக்காணம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு அலுவலக வாசல் முன்பு அழுது புலம்பியவாறு தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்ததும் தாசில்தார் அலுவலக  டிரைவர் செல்வகுமார் ஓடிச்சென்று பிரதாப் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தார். 
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தாசில்தார் சரவணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது வீட்டுக்கு செல்லும் பாதை பிரச்சினையில் சிக்கி தவிப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் அழுது புலம்பினர்.
அதிகாரிகள்  சமரசம்
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தினர். உடனே போலீசார் மற்றும் தாசில்தார், வண்டிப்பாளையத்திற்கு சென்றனர். அங்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சர்வேயர்கள் ஆகியோரை அழைத்து சம்பவ  இடத்தை சர்வே செய்து பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

Next Story