“எந்த துறையில் நுழைந்தாலும் அதில் முதல்வனாக விளங்க வேண்டும்” - அமைச்சர் பொன்முடி
படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு ஆகிய மூன்றும் சேர்ந்ததாக பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் கொண்ட குழுவை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த குழுவினருக்கான ஒருநாள் பயிலரங்கு சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொறியியல் பாடத்திட்டத்தை வேலைவாய்ப்பு சார்ந்த பாடத்திட்டமாக வடிவமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாணவர்கள் படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியையும் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
‘எந்த துறையில் நுழைந்தாலும், அதில் நான் முதல்வனாக திகழ வேண்டும்’ என எண்ணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு ஆகிய மூன்றும் சேர்ந்ததாக பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story