அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்


அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்
x
தினத்தந்தி 17 March 2022 10:18 PM IST (Updated: 17 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் என்று கைவினை பொருள் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்..

அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் என்று கைவினை பொருள் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்..
விற்பனை கண்காட்சி
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு, தொழில் , வணிகத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடற்கரை காந்திதிடலில் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு முரசு கொட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வாழ்வாதாரம்
பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது அங்கு பட்டம் செய்யும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பட்ட திருவிழா நடத்தினார். இதனால் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் செழிப்படைந்தது. இதேபோல் புதுவை அரசும் பல கண்காட்சிகள், திருவிழாக்களை நடத்தி கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வளர்த்து வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு விழாவிற்கு, திருமணத்திற்கு செல்லும் போது கைவினைப் பொருட்களைப் பரிசாக கொடுக்க வேண்டும். இது கைவினை கலைஞர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தும். அரசு அதிகாரிகளிடமும் இதை நான் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற திருவிழாக்கள் இன்னும் அதிகமாக நடைபெற வேண்டும். கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த கண்காட்சி தற்போது நடத்தப்படுகிறது. இந்த அரசு சொன்னதை செய்யும் அரசு. நாங்கள் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் திட்டங்களை அறிவிக்கும் போது சிலர் இவற்றை எல்லாம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த அரசு முதியோர் உதவித்தொகை முதல் மாணவர்கள் திட்டம் வரை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு விருதுகள் வழங்கி வருகிறது. தற்போது நாம் களிமண் சிற்பங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். கலையை எப்போதும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதற்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
150 அரங்குகள்
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., அரசு செயலாளர் அருண் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்னடர். இந்த கண்காட்சியில் 150 அரங்குகள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story