கறம்பக்குடி அருகே பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கறம்பக்குடி அருகே பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 March 2022 12:13 AM IST (Updated: 18 March 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கறம்பக்குடி:
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கள்ளியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புலவேந்திரன் (வயது 65). விவசாயி. இவரது மனைவி நிர்மலாதேவி. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் மற்றும் மருமகள் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுவிட்டனர். இளைய மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் புலவேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வெளி அறையில் சாவியை வைத்து அதன்மேல் தலையணையை வைத்து மறைத்து விட்டு மனைவி மற்றும் இளைய மகனுடன் வயலுக்கு சென்றுவிட்டார். வயலில் வேலையை முடித்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
நகை-பணம் கொள்ளை 
இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.46 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புலவேந்திரன் மறைத்து வைத்திருந்த சாவியை வைத்தே வீடு மற்றும் பீரோவை திறந்தே கொள்ளை சம்பவம் நடந்திருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புலவேந்திரன் மனைவி நிர்மலாதேவி இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் ரெகுநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story