தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்- பொதுமக்கள் கடும் அவதி
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.
சென்னை,
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இன்னும் கோடைகாலத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. சாலையில் நடந்து சென்ற மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி சென்றனர். மேலும் சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும், தலைகவசம் அணிந்தபடியும் சாலைகளில் சென்றனர். இதுமட்டுமின்றி, அனல் காற்றும் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இரவிலும் கடும் புளுக்கம் நீடித்தது. இதனால் உடலில் வியர்த்து நனைந்தபடியே இருந்ததால் மின் விசிறிகளை முழு வேகத்தில் வைத்தும் புளுக்கம் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தனர்.
வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க இயற்கை குளிர்பானங்களான இளநீர், நுங்கு, கம்பங்கூழ், தர்பூசணி மற்றும் செயற்கை குளிர்பானங்களையும் வாங்கி அருந்தி பொதுமக்கள் சூட்டை தணித்தனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சிலர் பகல் நேரங்களில் ஆறு, ஏரி, குளங்களுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது 101 டிகிரியையும் தாண்டி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திர காலங்களில் மதிய நேரங்களில் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டில் இருப்பது நல்லது. தேவையான அளவு இயற்கை குளிர்பானங்கள், தண்ணீர் குடிக்க வேண்டும், இதன் மூலம் கோடை காலம் மூலம் ஏற்படும் நோயை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெயில் கொளுத்துவதால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில், வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நீர் மோர், பழரசம், கூழ், கற்றாழை சாறு, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story