வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க நடவடிக்கை - நிதித்துறை செயலாளர் முருகானந்தம்
வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறினார்.
சென்னை,
தமிழக பட்ஜெட் குறித்து நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒட்டுமொத்த வருவாய் வரவு 2 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத ஆண்டாக கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு.
நிதிப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டு 3.62 சதவீதமாக கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் 3 சதவீதத்திற்கு கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த ஆண்டு நிதிநிலையை எடுத்துக் கொண்டால் ஒரு இக்கட்டான ஆண்டாக உள்ளது. முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் 17%-க்கும் அதிகமாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கவே மாதந்தோறும் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழி தனியார் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்
பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி மத்திய அரசிடமிருந்து கிட்டத்தட்ட கிடைத்து விட்டது. இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரூ.13,000 கோடி வர வேண்டியுள்ளது.
டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இது 7-8 சதவீதம் அதிகம் ஆகும். வரும் ஆண்டில் ரு.4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ஆயிரம் கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story