“தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்” - ஜி.கே.வாசன் கருத்து


“தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்” - ஜி.கே.வாசன் கருத்து
x
தினத்தந்தி 18 March 2022 3:21 PM IST (Updated: 18 March 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழக அரசின் நடப்பு (2022 - 23) ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7,000 கோடியாக குறைந்துள்ளது என்றால், வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்டுவதை விட மாற்றுத் திட்டங்களின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும். தற்போதைய பட்ஜெட்டில் கல்விக்காக, இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, அரசு மருத்துவமனைக்காக, வெள்ளத் தடுப்புக்காக, நீர்நிலப் பாதுகாப்புக்காக, சுற்றுச்சூழலுக்காக என பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வழக்கமானது.

மேலும், இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், கோயில்களை சீரமைக்கவும் ஒதுக்கிய நிதியானது முறையாக, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால்தான் சரியானதாக இருக்கும். இருப்பினும் தமிழ் மொழிக்காக, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதற்காக, மருத்துவத் துறைக்காக, துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியானது குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து பயன் தர வேண்டும். ஒதுக்கிய நிதியால் அந்தந்த துறைகள் வளர்ச்சி அடைய வேண்டும், பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமையவில்லை. குறிப்பாக கரோனா கால பாதிப்பில் இருக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

மிக முக்கியமாக திமுக தேர்தலுக்கு முன்பாக அறிவித்த வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா? என்ற சந்தேகம் நீடிக்கும் வகையில் அறிவிப்புகள் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக மக்களின் வருவாயைப் பெருக்குவதற்கான, மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story