விராலிமலை: சீர்வரிசையுடன் நடந்த முருகன் - வள்ளி திருக்கல்யாணம்...!


விராலிமலை: சீர்வரிசையுடன் நடந்த முருகன் - வள்ளி திருக்கல்யாணம்...!
x
தினத்தந்தி 18 March 2022 10:05 PM IST (Updated: 18 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே இந்து முறைப்படி மலைவாழ் மக்கள் கொடுத்த சீர்வரிசையுடன் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி ஸ்ரீ ராஜராஜேஷ்வரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் (முருகன்) சுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல் முறையாக இந்து சம்பிரதாய முறைப்படி இங்குள்ள முருகன்-வள்ளி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சார்பாக சிவத்தொண்டர் சண்முகம், சின்னபொண்ணு ஆகியோர் திருச்சி மாவட்டம் தேவராயநேரியில் உள்ள நம்பிராஜன் பரம்பரை வம்சத்தினர் மலைவாழ் மக்கள்(நரிக்குறவர்) இனத்தை சேர்ந்த துரைராஜ் - செல்வராணியிடம் மணமகள் வள்ளி சார்பில் திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

அதன் பேரில் இன்று மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சீர்வரிசையுடன் ராஜாளிப்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள தெப்பக்குள பிள்ளையார் கோவிலிலிருந்து தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளுடன் மேல தாளம் முழங்க ஊர்வலமாக சிவன் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமி (முருகன்) கோவிலுக்கு வந்தனர்.

அங்கு மணமேடையில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் உள்ள உற்சவர் சிலை முன்பு தத்ரூபமாக இருக்கும் விதமாக இந்து முறைப்படி மாலைமாற்றி, கன்னியாதானம் செய்து முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. 

இதில் ராஜாளி பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசாரம் நடந்தது. மேலும் மணமகன் மணமகள் வீட்டார் சார்பில் மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடந்தது.


Next Story