தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.! வேளாண் பட்ஜெட்டில் தகவல்
தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தோட்டக்கலை-மலைப் பயிர்கள் துறை
தோட்டக்கலை என்கின்ற இன்னொரு இறகு மூலம் உழவர்கள் நலனை பாதுகாக்கும் பணியை இத்துறை ஆற்றுகிறது. நறுமணம் வீசும் மலர்களையும், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளையும், பல்சுவை மிகுந்த பழங்களையும் பதார்த்தங்களுக்கு வாசனை சேர்க்கும் பயிர்களையும், காலை மாலையில் பருகும் பானங்களையும் தோட்டக்கலைத் துறையே தந்து வேளாண் துறையின் மகுடத்தில் மாணிக்கப் பரலாய், மயிலிறகாய் இருக்கிறது.
தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப்பாசன முறையினை மேம்படுத்த சிறப்புத்திட்டம்
தமிழகத்தில், தொகுப்பு அணுகுமுறையில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி, சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க இவ்வரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 960 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் (Tamil Nadu Organic Farming Mission)
தோட்டக்கலைத் துறை மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 50 எக்டர் அளவிலான தொகுப்புகள் (Cluster based) மாவட்டத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும்.
இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வாயிலாக அங்கக சாகுபடி குறித்த புரிதலை ஏற்படுத்துதல், மண்வளம் குறித்து தகவல்கள் கொடுத்தல், உயிர் உரங்கள் குறித்த ஆலோசனையும் இடுபொருட்களையும் வழங்குதல், விளைபொருட்களில் உள்ள இரசாயனத் தன்மையினை ஆராய்வதற்கான ஆய்வகங்கள் ஏற்படுத்துதல், அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவு செய்தல், போன்ற பல செயல்பாடுகளுடன் இத்திட்டம், 30 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். மேலும், இயற்கை எருவிற்கான மாட்டுக்கொட்டகை, மண்புழு உரக்கூடங்கள் போன்றவை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.
ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம்
ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்
பழப்பயிர்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் இவ்வாண்டு "பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்" செயல்படுத்தப்படும். நடவுச்செடிகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கி இத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.
தரமான மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பலா, இலந்தை, மாதுளை போன்ற நடவுச்செடிகளுக்கு முன் பதிவு செய்வது முதல் இடுபொருட்கள் விநியோகம், தரம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தல் வரை அனைத்து செயல்பாடுகளும் இணையவழியில்
மேற்கொள்ளப்படும். இத்திட்டம், 20 கோடியே 21 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
உயர் விளைச்சல் பெற துல்லிய பண்ணையத் திட்டம் (Precision Farming)
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்படும். இம்முறையில், இடுபொருட்கள், பணி ஆட்களின் செலவினம் குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த விளைபொருட்கள் கிடைக்கிறது. இத்திட்டம் எட்டாயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோடி ரூபாய் மாநில நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள், விதைகள் இடுபொருட்கள் வழங்கி, உயர் தொழில்நுட்பத்துடன் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல்.
ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, தென்னை, மா, கொய்யா, வாழை பயிரிட்டுள்ள சிறு/குறு விவசாயிகளுக்கு “ஊடுபயிர் தொகுப்பு” வழங்கப்படும். இத்திட்டம் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 27 கோடியே 51 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி (Hi-tech Horticulture)
அதிக வருவாய் அளிக்கக்கூடிய பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள், நிலப்போர்வை அமைத்தல் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட 25 கோடியே 15 இலட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.
மேலும் நகர்ப்புர மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்துப் பயன்பெறும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்துத் தோட்டத் தளைகள் (Vertical Garden) 500 பயனாளிகளுக்கு ரூபாய் 75 இலட்சம் நிதியில் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நுண்ணீர்ப் பாசன திட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழகம் (TAHDCO) மூலம் தட்கல் மின் இணைப்பு வழங்கிட தேர்வுசெய்யப்பட்ட இரண்டாயிரம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்குழாய்க்கிணறு, மின் மோட்டார், நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேனீ தொகுப்புகள் உருவாக்குதல்
நூற்றுக்கணக்கான மலர்களில் உழைத்து ஒரு சொட்டுத்தேனை உற்பத்தி செய்து உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் சுறுசுறுப்பிற்கு சொந்தக்காரர்கள் தேனீக்கள். மலர்களில் மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் தூதுவர்களாகச் செயல்படுபவை. தேனீக்கள் வளர்ப்பதினால் தேன் உற்பத்தி அதிகரிக்கும், பயிர் உற்பத்தியும் பெருகும். விவசாயிகளின் வருமானமும் உயரும். இதனைக் கருத்தில் கொண்டு, 37 தேனீ தொகுப்புகள் (Cluster based) எட்டு கோடியே 58 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.
தரமான தேனீ குடும்பங்கள், உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மையங்கள் அமைத்துத்தர உதவி செய்யப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தில், இத்திட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கதர் துறையோடு இணைந்து செயல்படுத்தப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில், மூன்றாயிரத்து 350 தேனீ தொகுப்புகள் ஒரு கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம்
உதிரிப்பூக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. மல்லிகை சாகுபடி பரப்பு, உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மகளிரின் அன்றாட வருமானத்தை உயர்த்தவும், மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்கள் சாகுபடியை நான்கு ஆயிரத்து 250 ஏக்கரில் மேற்கொள்ள, ஐந்து கோடியே 37 இலட்சம் ரூபாய் நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம்
காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைக் கண்டறிந்து, சிறப்புக் கவனம் செலுத்தி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். அதன்படி இவ்வாண்டு காய்கறிகளை கூடுதலாக ஆறு ஆயிரத்து 250 ஏக்கரில் பயிரிட விதைகள், குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்கி இத்திட்டம் ஐந்து கோடி ரூபாய் நிதியில் மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து அதிகரிக்கவும், தொடர்ந்து கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.
கிழங்கு வகை சுவை தாளித பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி
என மதுரைக்காஞ்சி இஞ்சி, மஞ்சள் பற்றி குறிப்பிடுகிறது.
உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகளில் மஞ்சள், இஞ்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உழவு, நடவுக்குரிய விதைக்கிழங்குகள், இதர இடுபொருட்களுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், ஆறு ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
பூண்டு சாகுபடிக்கு முக்கியத்துவம்
மருத்துவ குணம் நிறைந்த பூண்டு சாகுபடி, புதிதாக கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற வாய்ப்புள்ள இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு எட்டு ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தோட்டக்கலைப் பயிர்களில் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்தல்
தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சாகுபடி செய்யப்பட்டு வந்த பாரம்பரிய இரக பழப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் போன்றவை காலப்போக்கில் மறைந்து விட்டன.
‘இனி விதையே பேராயுதம்’ - என்ற நம்மாழ்வார் கூற்றுக்கு இணங்க தோட்டக்கலை பயிர்களின் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்து தற்சார்பினை உறுதிப்படுத்திடும் வகையில், பாரம்பரிய காய்கறிகள், பழங்களின் இரகங்களைப் பாதுகாக்க, சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும்.
சிறப்புத் தன்மைகள் கொண்ட பாரம்பரிய காய்கறிகளான கண்ணாடிக்கத்தரி, ஆண்டார்குளம் கத்தரி, கொட்டாம்பட்டி கத்தரி, வரிக்கத்தரி, வாசுதேவநல்லூர் கத்தரி போன்ற கத்தரி இரகங்களும், பள்ளப்பட்டி தேன் முருங்கை, கரும்பு முருங்கை போன்ற முருங்கை இரகங்களும், குழித்தக்காளி, கொடித் தக்காளி, அன்னஞ்சி தக்காளி போன்ற தக்காளி இரகங்களும், ஆனைகொம்பன், சிவப்பு வெண்டை போன்ற உள்ளூர் இரக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட ஊக்குவிக்கப்படும். இதற்குத் தேவையான காய்கறி விதைகள், விவசாயிகளுக்கும், வீட்டுத் தோட்டத்தில் பாரம்பரிய இரகங்களைப் பயிரிட விரும்பும் பொதுமக்களுக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படும். இத்திட்டம், ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிடத்து 500 ஏக்கர் பரப்பில் இரண்டு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல்
தமிழ்நாட்டில் தக்காளிப் பயிரானது வீட்டுத் தோட்டம், பாதுகாக்கப்பட்ட சூழல், பரந்த பரப்புகள் ஆகியவற்றில் சுமார் 53,000 எக்டரில் பயிரிடப்பட்டு 16 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதலில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், தக்காளி விவசாயிகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருட்களாக, ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், ஐந்து ஆயிரம் ஏக்கரில், இத்திட்டம் நான்கு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story