புதுவை கடலூர் மறைமாவட்ட பேராய ராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம்
புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்
புதுச்சேரி
புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்த ஆண்டு மே மாதம் மறைந்தார். அதைத்தொடர்ந்து பேராயர் பொறுப்பை கேரள மாநிலம் சுல்தான்பேட்டை பேராயர் பீட்டர் அபீர் அந்தோணிசாமி கவனித்து வந்தார்.
இந்தநிலையில் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உத்தரபிரதேசத்தின் மீரட் பேராயராக உள்ளார். இதற்கான உத்தரவை போப் ஆண்டவர் வெளியிட்டுள்ளார்.
புதிய பேராயரான பிரான்சிஸ் கலிஸ்ட் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மறைமாவட்டம் ராதாபுரத்தில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியை ராதாபுரத்திலேயே தொடங்கினார். அதன்பின் மீரட், ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் படித்தார். கடந்த 1982-ம் ஆண்டு முதல் அருட்பணியாற்றி வருகிறார். இவரது 51-வது வயதில் மீரட்டின் 3-வது பேராயராக நியமிக்கப்பட்டார். தற்போது புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயராகியுள்ளார்.
புதுவை-கடலூர் மறைமாவட்டமானது சுமார் 400 ஆண்டு பழமையானது. இதன்கீழ் தர்மபுரி, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், கடலூர் பகுதிகளில் உள்ள 311 கல்வி நிறுவனங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story