அண்ணாதிடலில் கால்பந்து டென்னிஸ் மைதானங்களுடன் ரூ 12 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டுமான பணிகள் மும்முரம்
புதுச்சேரி அண்ணா திடலில் கால்பந்து, டென்னிஸ் மைதானங்களுடன் ரூ.12 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி
புதுச்சேரி அண்ணா திடலில் கால்பந்து, டென்னிஸ் மைதானங்களுடன் ரூ.12 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அண்ணா திடல்
புதுவை நகரப்பகுதியில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விளையாட்டு திடல் என்பது கிடையாது. அந்த மாணவர்கள் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் புதுவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திடல் இருந்து வருகிறது. நகரப்பகுதியில் பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டு திடலை பயன்படுத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த விளையாட்டு திடலை சுற்றிய பகுதிகள் எல்லாம் வர்த்தக கேந்திரமாக விளங்குகிறது. 24 மணிநேரமும் போக்குவரத்து என இந்த பகுதியில் சாலைகள் பரபரப்பாகவே காணப்படும். இந்த அண்ணா திடலிலேயே அடிக்கடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்தால் இந்த திடலிலேயே கூட்டங்கள் நடத்தப்படும். ஆயிரக்கணக்கானோர் இங்கு அமர்ந்து நிகழ்ச்சிகளை காணும் அளவுக்கு இடவசதி உள்ளது.
ரூ.12 கோடி செலவில்...
பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுவந்த இந்த அண்ணாதிடலை இப்போது மாணவர்கள், விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மினி ஸ்டேடியம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.12 கோடி செலவில் திட்ட பணிகளுக்கு அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் அண்ணா திடலை சுற்றியிருந்த கடைகள் அகற்றப்பட்டு பணிகள் தொடங்கின. தற்போது கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இரவு பகலாக, பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம் போன்றவற்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
14,435 சதுர மீட்டர்
இங்கு சுமார் 14 ஆயிரத்து 435 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது. விளையாட்டு அரங்கத்தின் அடித்தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைகிறது. தரைத்தளத்தில் சாலைகளை நோக்கி 150 கடைகள் கட்டப்படுகிறது.
அதுமட்டுமின்றி 1,500 பேர் அமர்ந்து விளையாட்டுகளை பார்க்கும் வகையில் பார்வையாளர் மாடம், அலுவலகம், சேமிப்பு கூடம், பயிற்சி கூடம், கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளன.
திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
புதிய விளையாட்டு அரங்கில் 200 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து விளையாட்டுகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், தகவல் பலகை, உயர்கோபுர மின் விளக்குகள் ஆகியவையும் அமைகிறது. 250 விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஏதுவாக 14 தங்கும் கூடங்களும் அமைக்கப்படுகின்றன.
சிறிது காலம் பணிகள் மெதுவாக நடந்து வந்த நிலையில் இப்போது பணிகள் சூடுபிடித்துள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பணிகளை விரைவில் முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story