வெளிப்படையாக காவலர் தேர்வு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் போலீஸ் ஐ ஜி சந்திரன் எச்சரிக்கை
புதுச்சேரியில் காவலர் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கூறினார்.
அரியாங்குப்பம்
புதுச்சேரியில் காவலர் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கூறினார்.
காவலர் தேர்வு
தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘பள்ளி மாணவர்களுக்கான நல்லொழுக்கம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை ராஜகுமாரி வரவேற்றார். ஆசிரியர் முருகன், பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டு, பொதுத்தேர்வு உள்ளிட்டவைகளில் நிகழ்த்திய சாதனைகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு வெளிப்படையாக நடக்கிறது. இதில் எந்த முறைகேடும் நடக்காத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் விடைத்தாள்களை அவர்களே பார்த்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
விழிப்புடன் செயல்பட வேண்டும்
தொடர்ந்து படிப்பதே நமது இலட்சியம். கடின முயற்சியே ஒவ்வொருவரையும் வெற்றிக்கு கொண்டு செல்லும். புதுச்சேரியில் போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. குறுக்கு வழியை தேடி நேரத்தை வீணாக்கி கொள்ளாதீர்கள். மாணவர்கள் பல உயர் படிப்புகளை பற்றிய சிந்தனையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி படித்து முடித்து வேலைக்குச் செல்பவர்கள் லட்சக்கணக்கில் சம்பளமாக பெறுகிறார்கள். இதனை மனதில் கொண்டு மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். கல்வி, உழைப்பை மட்டுமே உறுதுணையாக கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் வெண்மணி, முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணபரதன், செல்வமூர்த்தி, சதாசிவம், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழாசிரியை கோமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story