விராலிமலை போலீஸ் நிலையத்தில் பார்வையற்றவர் தாக்கப்பட்ட விவகாரம்: பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் மத்திய மண்டல ஐ.ஜி. நடவடிக்கை


விராலிமலை போலீஸ் நிலையத்தில் பார்வையற்றவர் தாக்கப்பட்ட விவகாரம்:  பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் மத்திய மண்டல ஐ.ஜி. நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2022 12:12 AM IST (Updated: 20 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை போலீஸ் நிலையத்தில் பார்வையற்ற வாலிபர் தாக்கப்பட்ட விவகாரம் எதிரொலியாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

விராலிமலை:
பார்வையற்ற வாலிபர் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பார்வையற்றவர்.  அந்த பகுதியில் சட்டவிரோதமாக நடந்த மதுவிற்பனை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த சங்கரை விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ்காரர்கள் அசோக்குமார், பிரபு, செந்தில் ஆகிய 3 பேரும் தாக்கியுள்ளனர். 
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவும் சங்கரை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞரும், சமூக நல ஆர்வலருமான பழனியப்பன் பார்வையற்ற சங்கரின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்து அதனை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பவத்தை விளக்கி கூறினார். 
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இதனையடுத்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் சங்கரை தாக்கிய போலீஸ்காரர்கள் அசோக்குமார், பிரபு, செந்தில் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். 
இதைத்தொடர்ந்து சங்கரை போலீஸ்காரர்கள் தாக்கியபோது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பத்மா தடுக்காமல், அவரை திட்டியது தொடர்பாக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி  வந்தார். இந்நிலையில் நேற்று விராலிமலை இன்ஸ்பெக்டர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story