சென்னை சத்தியமூர்த்தி பவனில் குமரி அனந்தன் 90-வது பிறந்தநாள் விழா
சென்னை சத்தியமூர்த்தி பவனில் குமரி அனந்தன் கேக் வெட்டி தன்னுடைய 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். ப.சிதம்பரம்,அழகிரி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
குமரி அனந்தன் பிறந்தநாள்
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 90-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அழகிரி தலைமை தாங்கினார்.
விஜய் வசந்த் எம்.பி. வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து, குமரி அனந்தனுக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர். தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சுயசரிதை எழுத வேண்டும்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயமே இருக்க முடியாது. அரசியல் ஆளுமை, இலக்கிய ஆளுமை, தமிழ் ஆளுமை மேடை பேச்சு ஆளுமை, மொழி ஆளுமை உள்ளிட்ட அனைத்து ஆளுமைகளையும் கொண்டவர் குமரி அனந்தன். வரலாற்று நிகழ்வுகள் பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டுக்கு பதிலாக, இன்னும் வருகிற நாட்களில் 2014-ம் ஆண்டில் தான் சுதந்திரம் அடைந்தது என்று எழுதுவார்கள்.
பலர் வாழ்த்தி பேசும்போது, இன்னும் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று அனைவரும் வாழ்த்தினார்கள். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. அதற்கு முன்பாக 2 ஆண்டுகளில் தன் வரலாற்றை (சுயசரிதை) எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் தமிழகத்தின் வரலாறும், காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்விகளும் அனைவருக்கும் தெரியவரும். எனவே இதனை ஓரிரு ஆண்டுகளில் எழுதி எங்களுக்கு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதி வரை காமராஜரின் தொண்டன்
நிகழ்ச்சியில், குமரி அனந்தன் பேசியதாவது:-
சமுதாயத்தில் 89 ஆண்டுகள் பயனுள்ள வகையில் தான் வாழ்ந்து இருக்கிறேன் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் உணர்ந்துள்ளேன். என் பெற்றோர்களும் இந்த உலகத்திற்கு என்னை தந்ததும் வீணாக போகவில்லை. வாழ்த்தி பேசிய அனைவரும், என் வாழ்க்கையில், நான் மறந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் விதமாக பேசினார்கள்.
காங்கிரஸ் கட்சியில் வேலை தரவேண்டும் என்றால் உன் குடும்பத்தை உன் மாமனார் பார்த்து கொள்வார் என்று எனக்கு உறுதி அளிக்க வேண்டும். அப்படி செய்தால் உனக்கு காங்கிரசில் வேலை தருவேன் என்று காமராஜர் சொன்னார். காங்கிரசிற்கு வந்தாலும் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொன்னார். காமராஜரின் தொண்டனாகவே இறுதி வரை வாழ்வேன்
இவ்வாறு குமரி அனந்தன் கண்ணீர் மல்க பேசினார்.
நிகழ்ச்சியில், திருநாவுக்கரசர் எம்.பி.,தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், ஊடக பிரிவு மாநிலத் தலைவர் கோபண்ணா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., புலவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story