மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க திட்டம்!
வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை,
வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைகை அணை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத போதும், தொடர்ந்து 5 மாதங்களாக முழுக்கொள்ளளவில் இருக்கிறது. தற்போது வைகை அணையில் 69.36 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து கொண்டே வருகிறது. சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் திருவிழாவின் போது வைகை அணையில் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்தால் தண்ணீர் திறக்கப்படுவதில்லை.
சித்திரை திருவிழா
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இதில் உலக பிரசித்தி பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
தண்ணீர் திறக்கப்படும்
இந்நிலையில் இந்த ஆண்டு வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே உள்ளதால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து கண்டிப்பாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி வழங்கியதும் திருவிழா நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story