அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் அபேஸ்...!
வேலூர் அருகே அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக வட்டி தருவதாக...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ராமன் தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ், தொழிலாளி. இவருடைய மனைவி சுஜானா (வயது 37). கடந்தாண்டு அக்டோபர் மாதம் சுஜானாவின் முகநூல் மெசேன்ஜருக்கு ஒரு பதிவு வந்தது. அதில், நீங்கள் செலுத்தும் பணத்துக்கு அதிக வட்டி கிடைக்க தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு இணைப்பு (லிங்க்) காணப்பட்டது.
அதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த இணைப்பில் சென்று, அதில் கேட்கப்பட்டிருந்த வங்கிக்கணக்கு, ஆதார் அட்டை எண் உள்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துள்ளார்.
அதையடுத்து மர்மநபர் வங்கிக்கணக்கு ஒன்றை அனுப்பினார். அதில், கடந்த சில மாதங்களாக பல்வேறு தவணைகளில் சுஜானா தனது பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்று மொத்தம் ரூ.7 லட்சத்து 13 ஆயிரம் செலுத்தி உள்ளார். அந்த இணைப்பில் அவர் செலுத்திய தொகை மற்றும் அதற்கு கிடைக்கும் வட்டித்தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.7 லட்சம் அபேஸ்
இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் செலுத்திய தொகையில் இருந்து சிறிதளவு பணம் அந்த இணைப்பு மூலம் எடுக்க முயன்றார். ஆனால் வெகுநேரம் முயன்றும் அதில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த சுஜானா அந்த மர்மநபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மெசேன்ஜரில் இதுகுறித்து கேட்டபோதும் எவ்வித பதிலும் இல்லை.
அப்போது தான் சுஜானாவுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மர்ம நபர் ஏமாற்றி ரூ.7 லட்சத்து 13 ஆயிரத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது. அதையடுத்து அவர் வேலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story