வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கண்டனம்


வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கண்டனம்
x
தினத்தந்தி 21 March 2022 3:40 AM IST (Updated: 21 March 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளே பாராட்டும் வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பச்சைப்பொய்

“நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையையும், உழவர் பெருமக்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் பட்ஜெட் அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டு சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.

அதனால்தானோ என்னவோ “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப்பொய்யை அறிக்கையாக, பேட்டியாக கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் உதவுகிறார்

இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடோடி சென்று உதவுகிறார்.

சென்ற பட்ஜெட் அறிக்கையிலும், இந்த பட்ஜெட் அறிக்கையிலும், இதுவரை வெளியிடப்பட்டுள்ள உழவர்களுக்கான வேளாண் தனி பட்ஜெட் அறிக்கைகளிலும், வேளாண் துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

வேளாண் தொழிலின் பொற்காலம்

சென்ற வேளாண் பட்ஜெட் அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை, இந்த வேளாண் பட்ஜெட் அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது தி.மு.க. அரசு. எங்கள் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் பட்ஜெட் அறிக்கை - உழவர்களின் எதிர்காலம். வேளாண் தொழிலின் பொற்காலம்.

அதைத்தான் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அனைவரும் பாராட்டும் தமிழ்நாடு அரசின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் அறிக்கையை பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சி தலைவர் இருக்கலாம்; ஆனால் இன்று தி.மு.க. அரசு அளித்துள்ள, உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் பட்ஜெட் அறிக்கையை கொச்சைப்படுத்தி, ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட போலி விவசாயி, போலி பச்சைத்துண்டு வேடத்தை ‘ரிப்பீட்’ செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story