தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக இன்று தீர்மானம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
சென்னை,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆறு, விவசாயத்திற்கும் பெருமளவு பயன்பட்டு வருகிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி நிர்வாக ஆணையம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த நீர் பங்கீட்டு முறையை பின்பற்றி வருகிறது.
இருப்பினும் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது.
பெங்களூருவின் மக்கள்தொகை தற்போது 1.30 கோடியாக உள்ளது. இது வருகிற 2040-ம் ஆண்டுக்குள் 4 கோடி வரை உயரும் நிலை உள்ளது. பெங்களூரு உள்பட சில மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், நீர் மின்சார உற்பத்திக்காகவும் மேகதாதுவில் புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதேபோன்று, மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதனை தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிகிறார். இந்த தீர்மானத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது என வலியுறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுகோள் விடப்படுகிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் ஒப்புதல் பெறப்படும். இதன்பின்னர் இந்த தீர்மானம் ஆனது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story