மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு - தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது...!


மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு - தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது...!
x
தினத்தந்தி 21 March 2022 12:31 PM IST (Updated: 21 March 2022 12:36 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் கர்நாடகாவிற்கு எதிரக தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. 

ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது. 

இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது.

மேலும், கர்நாடக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த சில நாட்களுக்கு தாக்கல் செய்தார். அதில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதம் மாநில சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துகட்சிகளும் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த தீர்மானத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணைக்கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story