ரூ.1.81 கோடி பணத்தை இழந்த நடிகர் விக்னேஷ் - கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்


ரூ.1.81 கோடி பணத்தை இழந்த நடிகர் விக்னேஷ் - கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 21 March 2022 7:36 PM IST (Updated: 21 March 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 கோடி பணத்தை இழந்த நடிகர் விக்னேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

இரிடியம் மோசடி கும்பலிடம் நானும், எனது நண்பர்களும் ரூ.1.81 கோடி பணத்தை இழந்து விட்டோம் என்றும், அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நடிகர் விக்னேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

இன்று அவர் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது,

கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நான் நடித்துள்ளேன். 30 வருடங்கள் சினிமாவிலும், அதன் பிறகு சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகை தாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். அவருடன் கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சபாரி உடையில் இருப்பார்கள். சைரன் கருவி பொருத்திய காரில் தான் அவர் உலா வருவார். இதனால் அவர் ஒரு வி.ஐ.பி.யாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

துப்பாக்கி பாதுகாப்பு ஏன்? எனக் கேட்டதற்க்கு இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்ப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் கூறினார். இதனால் தான் எனக்கு மத்திய அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது, என்றும் ராம்பிரபு கூறினார். மேலும் இரிடியம் விற்க்கும் தொழிலை சட்டப்பூர்வமாக செய்வதாக சொன்னார். 

இது சம்பந்தமாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும், விருதுநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றிலும் நடந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்றனர். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். 

என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால்,ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும், ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். ஒரு முறை நேரில் சந்தித்த போது, ரூ.500 கோடி கண்டெய்னர் லாரி மூலம் வருகிறது என்றும், வந்தவுடன் தருவதாகவும் சொன்னார்.

என்னைப் போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை என்பதும், அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் என்னைப் போல 500 பேர்களிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். அவர் மீதும்,அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story