திருப்பூர்: நடிகர் சூர்யா படம் ஓடிய தியேட்டரில் பயங்கர தீ விபத்து...!
திருப்பூரில் நடிகர் சூர்யா நடித்த படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வரும் சினிமா தியேட்டரில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தியேட்டரில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் காட்சி முடிந்த பிறகு பார்வையாளர்கள் வெளியே சென்றுவிட்டனர். அப்போது திடீரென திரையரங்கிற்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த வெள்ளகோவில் தீயணைப்பு துறை அலுவலர் தனசேகர் மற்றும் வேலுச்சாமி கொண்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் திரையரங்கிற்கு இருந்த பார்வையாளர்கள் இருக்கைகள் மற்றும் மேல்கூரை எரிந்து நாசம் ஆயிற்று. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமா அல்லது எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் நடைபெற இருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story