பி.எஸ்.பாளையம் பம்பை ஆற்றங்கரையில் அகழாய்வுக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு


பி.எஸ்.பாளையம் பம்பை ஆற்றங்கரையில் அகழாய்வுக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 21 March 2022 11:35 PM IST (Updated: 21 March 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

பண்டைய வாணிப நகரங்களை அடையாளம் காண பி.எஸ்.பாளையம் பம்பை ஆற்றங்கரையில் அகழாய்வு காண புதுவை அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டைய வாணிப நகரங்களை அடையாளம் காண பி.எஸ்.பாளையம் பம்பை ஆற்றங்கரையில் அகழாய்வு காண புதுவை அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘பொதுக்கே’
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மீனவர்களும், நெசவாளர்களும் ஆங்காங்கே பரவலாக குடியிருந்த புதுச்சேரி பகுதி பின்னர் ரோம் சாம்ராஜ்யத்திடம் தொடர்பு கொண்டு சுறுசுறுப்பான துறைமுக வியாபார தலமாக வளர்ந்தது. பழம்பெரும் ரோமானிய மற்றும் கிரேக்க புவியியல் அறிஞர்களால் இந்த இடம் ‘பொதுக்கே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அயல்நாட்டு பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி ஆகியோரும் காவேரிபூம்பட்டினம் மரக்காணத்திற்கு இடையே பொதுகே என்று குறிப்பிட்டுள்ளனர். பொதுக்கே என்பது இன்றைய புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு என்று வரலாற்று ஆய்வாளர்கள் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் உள்ளிட்டோரும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
வியாபார தலம்
மிகப்பழமையான காலத்தில் இருந்தே மறைகள் கற்பிக்கப்படும் தலமாகவும் இது விளங்கியதால் வேதபுரி என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சோழர் காலத்தில் இது துறைமுக பட்டினமாக செழித்தோங்கி புதுச்சேரி என அறியப்பட்டது. பின்னர் அன்னிய ஆதிக்கத்தின் காரணமாக வியாபார தலமாக மாறியது. 
1689-ல் பிரெஞ்சுகாரர்கள் இங்கு தமது வியாபார துறைமுகத்தையும், கோட்டையையும் அமைத்தனர். அதன்பின் அவர்கள் இந்த இடத்தை பாண்டிச்சேரி என்று அழைக்கத்தொடங்கினர். இதில் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மண் கலன்களும், வெளிநாடுகளில் தாயாரித்து கொண்டுவரப்பட்ட மண்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு. 200-ல் இருந்து கி.பி. 200 வரை ஆகும்.
பல வகை சுடுமண் விளக்குகளும் கூரை ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன. இதன் மூலம் பண்டைய காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதேபோல் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு மேற்கொண்டனர்
அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரிய வந்துள்ளது. இவ்வளவு சிறந்த துறைமுகமாக விளங்கிய அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்தெந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பதும் இன்றைக்கும் அறியமுடியாமல் உள்ளது.
இதனை அறிந்து கொள்ளும் வகையில், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிக தலங்களை கண்டறிந்து அகழாய்வு மேற்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது திருக்கனூர் அடுத்த பி.எஸ். பாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பை ஆற்றின் கரையோரம் கி.பி. 1-ம் நூற்றாண்டின் பயன்படுத்திய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பொருட்களின் சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கமேட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதினர்.
ரூ.20லட்சம்
இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர். இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெரிய வரும். எனவே கோட்டைமேட்டில் உள்ள பம்பை ஆறு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் புதுவை அரசும் இந்த ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி முதல் கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது தாகூர் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், கோட்டைமேடு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்த உடன் அவர் தனது குழுவினருடன் அங்கு சென்று அகழாய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆயத்த பணிகள்
பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பம்பை ஆற்றங்கரையில் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாகவே உள்ளன. இங்கு அறிவியல் ரீதியாக நவீன தொழில்நுட்களை பயன்படுத்தி அகழாய்வு மேற்கொள்வதன் மூலம் புதுச்சேரியின் பழங்கால நகரங்களின் பெருமையும், புதையுண்டு கிடக்கும் அக்கால தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளும், பண்டைய காலத்தில் பயன்படுத்திய கட்டிட கலையும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அகழாய்விற்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

Next Story