ஒருவர் பின் ஒருவராக 2 ரெயில்களில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை


ஒருவர் பின் ஒருவராக 2 ரெயில்களில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 22 March 2022 2:49 AM IST (Updated: 22 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என கடிதத்தில் உருக்கமான தகவல் எழுதப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகள் சோலைமீனா (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். பயிற்சிப்பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இவரும், சாத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் குமார் எலக்ட்ரீசியன் ஆவார்.

அடுத்தடுத்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த காதலன் பிரவீன்குமார் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில், விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள தண்டாவளம் பகுதிக்கு சென்று குருவாயூரிலிருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்

இதுதொடர்பாக பிரவீன்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீயும் (சோலை மீனா), நானும் சேர்ந்து வாழ முடியவில்லை. சாகவும் முடியவில்லை. ஏன் என்னை விட்டுச் சென்றாய்?. நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் எப்படி வாழ்வேன்?

என்னை மன்னித்துவிடு. தற்கொலைக்கு முக்கிய காரணம் மீனா பணியாற்றிய தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 பேர் தான் (இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்). அவர்கள்தான் எங்கள் சாவுக்கு முழுக்க காரணம். எங்களை வாழ விடாமல் பிரித்தார்கள். எங்களை சாவில் எப்படி பிரிப்பார்கள் என்று பார்ப்போம்? அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு கடவுள் துணை இருக்கட்டும். என் மீது உண்மையான அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி.

இப்படிக்கு பிரியாவிடையுடன் பிரவீன் குமார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story