6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அனுமதி


6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அனுமதி
x
தினத்தந்தி 22 March 2022 5:15 AM IST (Updated: 22 March 2022 5:15 AM IST)
t-max-icont-min-icon

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னர் நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், அவர்களுக்கான உடற்கல்வி (பி.இ.டி.) வகுப்புகள், இறைவணக்க கூட்ட நிகழ்வுகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் தற்போது சில வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அந்த உத்தரவு வருமாறு:-உடற்கல்வி ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதற்கு இணங்க, அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி, விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அந்த வகுப்பு மாணவர்களைத் தவிர, 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி, விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.  இதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடற்கல்வி வகுப்புகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருப்பது போல, இறைவணக்க கூட்ட நிகழ்வுகளுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Next Story