தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்படும்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு ‘சீல் வைக்கப்படும்
x
தினத்தந்தி 22 March 2022 5:23 AM IST (Updated: 22 March 2022 5:23 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாரர் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

அபராதம் வசூலிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முதல் சோதனையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்தால், அபராதம் விதிக்கப்படுகிறது.

தாராளமாக கிடைக்கிறது

ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தாமல், தொடர்ந்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படுகிறது என்று கூறினாலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து தாராளமாக கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

வீட்டில் விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் வேண்டும். விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story