ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று மீண்டும் ஓ.பி.எஸ். ஆஜர்
ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்னும் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணையம் தரப்பில் கேட்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வந்தார். அந்த வகையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இதுவரை ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்னும் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணையம் தரப்பில் கேட்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆணையத்தில் ஆஜராகிறார். ஆணையத்தின் விசாரணை முடிந்ததும் சசிகலா, அப்பல்லோ தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
Related Tags :
Next Story