குடும்பத் தகராறு: குழந்தைகளுடன் ரெயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!
பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் ஓடும் ரெயில் முன் தனது இரு குழந்தைகளுடன் பாய்ந்ததில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தஞ்சாவூர்,
பட்டுக்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்து தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாயும் மகனும் இறந்தனர். மகள் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுக்கோட்டை நகரில் உள்ள லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). அவர்களுக்கு சமயா (வயது 5) என்ற மகளும், தர்ஷன் (வயது 2) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை 10.55 மணி அளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பட்டுக்கோட்டை வந்தது. பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, லட்சத்தோப்பு ஆற்றங்கரை பகுதியில் ரயில் வந்தபோது மகேஸ்வரி தன் 2 குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்தார்.
ரெயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி மற்றும் மகன் தர்ஷன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் குழந்தை சமயா ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே ரயில் நிறுத்தப்பட்டு மகேஸ்வரி, தர்ஷன் ஆகிய இருவரின் உடல்களையும், ஆபத்தான நிலையில் இருந்த சமயாவையும் அதே ரயிலில் பேராவூரணி கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்ற சமயா மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக மகேஸ்வரி குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story