நெல்லை: கல்லூரி மாணவர் கொலை - கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லையில் நண்பனை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை,
நெல்லையில் கல்லுரி மாணவனை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மாணவர் கொலை
நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த குட்டி மகன் அசோக் (வயது 19). இவர் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அசோக் ஊருக்கு வெளியே சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (21), சுரண்டையைச் சேர்ந்த சபரி செல்வம்( 21 ) ஆகிய 2 பேர் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமர், சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கொலையாளிகள் வெளியூர் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றிவளைத்து, உடனடியாக மருதுபாண்டி மற்றும் சபரி செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்கு மூலம்
அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருதுபாண்டி போலீஸாரிடம் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
கொலைசெய்யப்பட்ட அசோக்கும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த நிலையில் எனது உறவினரிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை நடத்த என்னுடன் வேலை பார்க்கும் சுரண்டையைச் சேர்ந்த சபரி செல்வம் என்ற வாலிபரை அழைத்து வந்திருந்தேன்.
இது தொடர்பாக எனது உறவினர்களுக்கும் எங்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அசோக் நண்பரான எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல், சமரசம் பேசுவதுபோல் பேசி, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வெளியூர்காரரை எப்படி இங்கு அழைத்து வரலாம் என்று என் நண்பன் சபரி செல்வத்தை அவதூறாக பேசி, என்னை தள்ளி விட்டார் . இதனால் அசோக் மீது ஆத்திரம் ஏற்பட்டது .
சம்பவத்தன்று அசோக் தனியாக வந்ததை அறிந்து, அவரை வழிமறித்து தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினோம் . ஆனால் போலீசார் நாங்கள் கொலை செய்ததை அறிந்து, உடனடியாக எங்களை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story