பழனியில் நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்... ஆற்றில் மூழ்கடித்து 5 மாத ஆண் குழந்தை கொலை
பழனி அருகே ஆற்றில் மூழ்கடித்து 5 மாத ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டது. வீட்டில் இருந்து தூக்கிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே உள்ள ராசாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 30). இவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி லதா (25).இந்த தம்பதிக்கு கவின் (3) என்ற மகன் இருக்கிறான். இந்தநிலையில் கடந்த 5 மாதத்துக்கு முன்பு லதாவுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கோகுல் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
நேற்று காலை வழக்கம்போல் மகேஸ்வரன் வேலைக்கு சென்று விட்டார். தனது 2 குழந்தைகளுடன் லதா வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் லதா, குழந்தை கோகுலை தனது வீட்டுக்குள் பாய் விரித்து படுக்க வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றதாக தெரிகிறது.
சிறிதுநேரம் கழித்து கழிப்பறையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது, பாயில் படுத்திருந்த குழந்தை கோகுலை காணவில்லை. இதனால் லதா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.
பச்சிளங்குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே லதா மற்றும் அவருடைய உறவினர்கள் குழந்தையை தேடினர். ஆனால் கோகுல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குழந்தையை விற்பனை செய்ய யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் மகேஷ்வரனின் வீட்டில் இருந்து 300 அடி தூரத்தில் சண்முக நதி ஆறு உள்ளது. தற்போது ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுகிறது. அங்கு சென்று போலீசாரும், மகேஷ்வரனின் உறவினர்களும் குழந்தையை தேடினர்.
அப்போது அங்குள்ள அமலைச்செடிக்குள், கொலை செய்யப்பட்ட நிலையில் கோகுல் பிணமாக கிடந்தான். இதனால் போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்து குழந்தையை தூக்கி வந்த மர்மநபர், அதனை ஆற்று தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து புதருக்குள் வீசிச்சென்றது தெரியவந்தது.
பச்சிளங்குழந்தை என்று கூட பாராமல், மனதை கல்லாக்கி இந்த கொடூர கொலையை செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அருகே நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story